சர்வதேச பயணத்தின்போது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நேரத்தில் செலவைக் குறைக்கும் நோக்கில் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்காமல் பிரதமர் மோடி தங்குவது,  குளிப்பது என அனைத்தையும் விமானத்திலேயே செய்துகொள்கிறார் என  உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமரை வெகுவாக பாராட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

முன்பெல்லாம் பிரதமர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை மற்றும் மற்றும் மெயின்டனன்ஸ் செய்யப்படும் நேரங்களில் விமானம் நிறுத்தி வைக்கப்படும் போது,  அங்குள்ள  ஹோட்டல்களில் புக் செய்து தரப்படும்.   ஆனால் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து இது வரை தனியாக ஓட்டல்களை புக் செய்து அவர் தங்கியது இல்லை என்றார்.  அவர் விமானத்தில் தான் தங்குகிறார், அதிலேயே குளிக்கிறார் , அதிலேயே சாப்பிடுகிறார். எரிபொருள் நிரப்பப்பட்ட பின் வழக்கம் போல தன் வேலைகளை தொடங்குகிறார் என அமித்ஷா கூறியுள்ளார்.  அதிக அளவில் அரசு அதிகாரிகள் தன்னுடன் வந்தால் அது பொருட்செலவை ஏற்படுத்தும் என்பதால் முன்பு  இருந்ததை காட்டிலும்  20 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களையே தன்னுடன் அழைத்துச் செல்கிறார் என தெரிவித்தார்.

முன்பெல்லாம் பணியாளர்களுக்கு என்று தனி வாகனம் ஏற்பாடு செய்யப்படும்,  ஆனால் பணியாளருக்கு  ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் முடிந்த அளவு நாலு முதல்  ஐந்து பேர் அதில் செல்ல வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பதவியேற்றதிலிருந்து  பிரதமர் மோடி அதிக அளவில் வெளிநாட்டுக்கு செல்வதின் மூலம் மக்கள் வரிப்பணத்தை விரையமாக்கி வருகிறார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அமித்ஷா இந்த விளக்கத்தை இன்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .