2021 ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகையால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

* அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

*  கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

*  சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்

*  திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது 

*  திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது 

*  தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு

*  இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு

*  தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. *மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

*  2021 ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.