சென்னை மைலாப்பூர் கச்சேரி சாலையில் அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,கே..சி.வீரமணி,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 

கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் வாயிலாக மீண்டும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஐஐடி கல்லூரியில்  71 மாணவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் ஐஐடி வளாகத்தில் நோய்த்தொற்று தொடர்ந்து பரவாமல் தடுத்திட ஐஐடி இயக்குனருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சரும் நானும் அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். ஐஐடியில் நோய் பரவுவதற்கு காரணமாக இருந்த கேன்டீன் தற்காலிகமாக மூடப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வாயிலாக நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.