பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்..! இபிஎஸ்க்கு எதிராக தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ்சை அவமதித்த பொதுக்குழு
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொதுக்குழுவில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மேடையில் ஏறக்கூடாது என பொதுக்குழு உறுப்பினர்களால் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானத்தை நிராகரித்தும் நிர்வாகிகள் அறிவித்தனர். மேடையில் ஓபிஎஸ்சை வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி. ஜெயக்குமார் ஆகியோர் ஓபிஎஸ்க்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த இடமே பரபரப்புக்குள்ளனது. மேலும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை நியமிப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.
தேனியில் இபிஎஸ்க்கு எதிராக போராட்டம்
இதனால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்த நிலையில் அவரின் மீது தண்ணீர் பாட்டில் வீசினர். மேலும் அவர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர் ஆக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போடி சட்ட மன்ற அலுவலகத்தில் ஒன்று கூடினர். 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்டதற்கு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் அவருடைய தூண்டுதலில் ஓ பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறி அவரைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அம்மாவால் வழிநடத்தப்பட்ட கட்சியினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மீட்டெடுப்போம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்
பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?