அதிமுக அணிகள் இணைப்பு நடைபெறும் இந்த பரபரப்பான நேரத்தில், நடிகர் கமல் ஹாசன், தமிழனுக்கு கோமாளி குல்லா என்றும், தமிழர்கள் வெகுண்டெழ வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து வந்தனர். 

நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதலமைச்சர்  ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். தமிழக முதலமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து உள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், இன்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைய உள்ளது. இதற்காக கட்சி தலைமையகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். இரு அணிகள் இணைப்பு உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், அணிகள் இணைப்புக்காக அதிமுக அலுவலகம் செல்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழநிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழனுக்கு கோமாளி குல்லா என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழர்கள் வெகுண்டெழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த டுவிட்டரில், காந்திக்குல்லா! காவிக்குல்லா! காஷ்மீர் குல்லா!! தற்போது கோமாளி குல்லா. தமிழன் தலையில் போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என்று கமல் பதிவிட்டுள்ளார்.