அதிமுகவில் இரண்டு அமைச்சர்கள் உள்ள திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 14 ஒன்றியங்களையும் திமுகவிடம் ஆளுங்கட்சி தாரைவார்த்து கொடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் ஒரு ஒன்றியத்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு அதிமுக படுதோல்வி அடைந்திருப்பது எடப்பாடியை எரிச்சலடைய செய்துள்ளது. 

ஜெயலலிதா இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் உள்ள அத்தனை ஊரக பதவிகளையும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு பெற்றுக் கொடுத்தனர் அக்கட்சியின் தொண்டர்கள். ஆனால், இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைத்து பதவிகளையும் திமுக தட்டி தூக்கியுள்ளது. இத்தனைக்கும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கே.என்.நேருவின் வியூகத்தை சமாளிக்க முடியவில்லை படுதோல்வி அடைந்தனர். 

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஒன்றிய குழு தலைவர்கள் பதவி உள்ளன. இந்த அனைத்து பதவிகளையும் திமுக தட்டித் தூக்கியுள்ளது. ஒரு ஒன்றிய தலைவர் பதவி கூட அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. மொத்தம் 241 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் திருச்சியில் உள்ள நிலையில் அதில் வெறும் 51 தான் அதிமுகவிற்கு கிடைத்தது. திமுகவோ 150-க்கும் மேற்பட்ட பதவிகளை பெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதோடு மட்டும் அல்லாமல் மொத்தம் உள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுகவிற்கு கிடைத்ததோ 19 பதவிகள். ஆனால் அதிமுக வெறும் 5ல் மட்டுமே வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அதிமுகவால் திருச்சியில் வெற்றிக் கொடி நாட்ட முடியாதது முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.