இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததையடுத்து நோய் பரவும் விகிதம்  வெகுவாக குறைந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்த தகவல் இந்திய மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  உலக அளவில்  20 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இந்தியாவில் சுமார் 14, 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை 488 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார்  2045 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சுமார் 11 ஆயிரத்து 892 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 

ஆனால் இதில் ஒருவர் கூட ஐசியுவில் அனுமதிக்கப்படவில்லை ,  அது மட்டுமின்றி இந்தியாவில்  சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் லேசான காய்ச்சலால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .  எனவே நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் என்றும் குணமடைவோரின் எண்ணிக்கையே அதிகம் என்றும் தெரிவித்துள்ளது .  ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில்  பிரதமர் மோடி இந்தியாவில் தொடர் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் .  மே -3 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . இதனால்  ஒருபுறம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அதே நிலையில் ஊரடங்கு நாட்டிற்கு நல்ல பலனை அளித்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 அதாவது ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுத்துள்ளது .  குறிப்பாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதன்  மூலம் வைரஸ் சமூக  தொற்றாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளது .  உடங்கு உத்தரவு அமலுக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே  இரட்டிப்பாக இருந்த நோய் தொற்று விகிதம் 6.2 நாட்களாக குறைந்துள்ளது .  அதே போல் நோயால் குணமடைந்தவர்கள் மட்டும் இறந்தவர்களின்  விகிதம் 80:20  என்ற அளவில் பதிவாகியுள்ளது .  இது மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நல்ல அறிகுறியாகவே உள்ளது. 

இந்நிலையில்  நேற்று ஒரே நாளில் 1007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ,  23 பேர் உயிரிழந்துள்ளனர் . அதே நேரத்தில் சரியான நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்  நோய் தாக்கம் 41 சதவீதம் அளவுக்கு  குறைந்துள்ளது .  ஒருவேளை ஊரடங்கு அறிவிக்காமல் போயிருந்தால்   லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பர்   என்றும் அவர் தெரிவித்துள்ளார்.