Asianet News Tamil

உலக நாடுகளுக்கு இந்தியா ஒளிகாட்டுவது கிடக்கட்டும்... கூச்சமில்லாமல் கேட்கிறோம்... சோறும், வேலையும் கிடைக்குமா?

பிரச்னை அது இல்லை பிரதமர் அவர்களே... 'வேலை வெட்டி இல்லாம வூட்டுலயே உட்கார்ந்து.. மூச்சுத் திணறுது... இயல்பு நிலை எப்போ வரும்... எங்களுக்கு வேலை எங்கே இருக்குது..?

Indias world should be lighting up ... get tired and get a job?
Author
Tamil Nadu, First Published May 13, 2020, 11:10 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உள்ளூர்ப் பொருட்கள்; உள்ளூர் உற்பத்தி... இதைத்தானே மகாத்மா காந்தி சுதந்திரத்துக்கு முன்னமே சொன்னாரு..? 'தன்னிறைவு பெற்ற கிராமங்கள்' என்கிற இலக்கு, பகல் கனவாகப் போய் விட்டது என எழுத்தாளர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். 

பிரதமர் மோடி உரைகுறித்து விமர்சித்துள்ள அவர், ‘’எல்லாம் சரிதான்... சோத்துக்கு என்ன வழி..? இந்தியப் பிரதமர் மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களுக்கு உரை ஆற்றி இருக்கிறார். இது யாரையேனும் ஆற்றுப் படுத்தி இருக்கிறதா..? சத்தியமாக இல்லை. அவரது உரை - ஒரே வார்த்தையில் - ஏமாற்றம். இந்தியா ஒரு மிகப் பிரமாதமான நாடு. இந்திய இளைஞர்கள் எல்லாரும் அறிவாளிகள்; உழைப்பாளிகள்; திறமைசாலிகள்... எல்லாம் சரி. இவங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கன்னுதான் கேட்கிறோம். 

வெற்று அறிவிப்புகள் வேண்டாம்; காலவரம்புக்கு உட்பட்ட, தீர்க்கமான உறுதியான செயல் திட்டம் அறிவியுங்கள். வேறு எதையும் கேட்கக் கூடிய மனநிலையில் நாடு இல்லை. 'இருக்குற வேலை தங்குமா..? சம்பளம்னு ஏதாவது குடுப்பாங்களா..?' தினக்கூலிக்குப் போனவங்க எல்லாம் சொந்த ஊருக்கே போயிட்டாங்களே...
 
அங்க எதுவும் இல்லைன்னுதானே, மூட்டை முடிச்சுங்களத் தூக்கிகிட்டு சொந்த மண்ணை விட்டு, உறவுங்களை எல்லாம் வுட்டு, 'வேற எங்கயோ' பொழைக்க வந்தாங்க..? இப்போ..? திரும்பவும் அவங்க சொந்த ஊருக்கே போயி என்ன செய்யப் போறாங்க..? கூச்சமே இல்லாமக் கேட்கிறோம். அடுத்த வேளை சோத்துக்கு என்ன வழி..? இதைப் பத்தி எதுவும் பேசாம, உலக நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப் படுது; நாலுகால் பாய்ச்சல்ல முன்னேறப் போறோம். உலகத்துக்கே தலைமை தாங்கப் போறோம்.' எதுக்கு இந்தப் பேச்சு..? 

உள்ளூர்ப் பொருட்கள்; உள்ளூர் உற்பத்தி... இதைத்தானே மகாத்மா காந்தி சுதந்திரத்துக்கு முன்னமே சொன்னாரு..? 'தன்னிறைவு பெற்ற கிராமங்கள்' என்கிற இலக்கு, பகல் கனவாகப் போய் விட்டது. இப்போது வந்து புதிதாக ஏதோ கண்டுபிடித்து விட்டாற் போல் சொல்வது, ஏற்புடையதாக இல்லை.  20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டங்கள் வரப் போகுதாம். இது பற்றிய விவரங்கள் எல்லாம், இன்றைக்கு நிதி அமைச்சர் சொல்லப் போறாங்களாம். தன்னுடைய அமைச்சர் அடுத்த நாள் பேசுவார்னு ஒரு பிரதமர் நாட்டு மக்களுக்கு சொன்னது -அநேகமாக இதுதான் முதல்முறை.

 

இன்றைக்கு சொல்லப் போகிற 'சிறப்பு' திட்டங்கள் எந்த லட்சணத்துல இருக்கப் போவுதுன்னு பார்த்துருவோம். நல்லா இருந்தா நிச்சயம் பாராட்டுவோம்.
பிரச்னை அது இல்லை பிரதமர் அவர்களே... 'வேலை வெட்டி இல்லாம வூட்டுலயே உட்கார்ந்து.. மூச்சுத் திணறுது... இயல்பு நிலை எப்போ வரும்... எங்களுக்கு வேலை எங்கே இருக்குது..? யார் வேலை குடுக்கப் போறாங்க..? எவ்வளவு கூலி தருவாங்க..? எங்க கஷ்டத்தைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்குங்க சாமி... ஓசி சோறு வேணாம்... உழைச்சு சாப்பிட நாங்க தயாரா இருக்கோம்... வேலை குடு... கூலி குடு.. அது போதும். இது மட்டும் செஞ்சி குடு... புண்ணியமாப் போவும்..'. 

இந்தக் குரல் வணக்கத்துக்கு உரிய பிரதமர் அவர்களுக்குக் கேட்கிறதா இல்லையா..? அரை மணி நேரம் பேசறதை 'பார்த்தோம்'. (நமக்கு இந்தி புரியாது; 'பெரியவங்க' இந்தியிலதான் பேசுவாங்க. அதனால ஊமைப் படம் பாரக்குற மாதிரி, பார்த்து வைப்போம்) மெய்யாலுமே, ஏமாத்தம்தான் மிஞ்சுது. எதுக்கு சாமி இந்தப் பேச்சு..? 

அதிகாரத்தில் உள்ள பெரிய மனிதர்களுக்கு மெத்த பணிவான வேண்டுகோள்: 'தயவு செய்து எங்கள் இன்னல்களைப் புரிந்து கொண்டு பேசுங்கள்; இல்லையா... பேசாமலே கூட இருங்கள் பரவாயில்லை. எல்லாமே சிறப்பாக பிரமாதமாக அற்புதமாக இருக்கிறது என்று சொல்லி, மன்னிக்கவும், எங்களை அவமானப் படுத்தாதீர்கள்'.  நோய்த் தொற்றுக்கு எதிராக மிகச் செயல் பட்டு வருகிற மத்திய- மாநில அரசுகளைப் பாராட்டுகிறோம். மனதார நன்றி கூறுகிறோம். எங்களுக்கு என்று கடமையும் பொறுப்புணர்வும் இருக்கிறது. நீங்கள் சொல்கிற படியெல்லாம் கேட்கிறோம். பதிலுக்கு நாங்கள் இதைத்தான் கேட்கிறோம். வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மிகுந்த கவலையுடன் இருக்கும் சாமான்யர்களின் வருமானத்துக்கு வழி செய்யுங்கள். 

வேறு எந்தப் பேச்சும் இப்போதைக்கு வேண்டாமே. ஆள விட்ட மக்கள் கூறுவதை சற்றே காது கொடுத்துக் கேளுங்கள் -'ஆள விடுங்கடா சாமி!' எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios