சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை ராணுவ ரீதியாக எதிர்கொள்ள இந்தியா பாதுகாப்பு துறையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  சீனாவின் கடற்படை பலத்தை சமாளிக்க சுமார் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க அதிரடியாக திட்டமிட்டுள்ளது. அது அத்தனையையும் உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. 

உலகமே கொரொனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது, இந்தியா மற்றும் கொரோனாவுடன் சேர்த்து சீனா பாகிஸ்தான் ஆகிய எதிரி நாடுகளிலிருந்து எல்லையை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து இந்தியாஉடன் பாகிஸ்தான் பகைமை பாராட்டி வரும் நிலையில்,  கடந்த 3 மாதத்துக்கு மேலாக கிழக்கு லடாக் பகுதியில், கால்வாய் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா தனது ராணுவ தீரத்தால் அதை தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனாலும் இரு நாட்டுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்துவருகிறது. அதேபோல் சீனா தனது கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவும் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது, 

இது குறித்து  ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சுமார் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்கு ப்ராஜெக்ட்-75 என பெயரிடப்பட்டுள்ளது.  சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  6 கப்பல்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும், அது முழுக்க முழுக்க அயல்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எனவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி முடிக்க பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும், அதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் கப்பல் தயாரிக்க முன் வந்திருப்பதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது. 

 

அந்த நிறுவனங்களை ராணுவ அமைச்சகம் தேர்வு செய்துள்ளதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நாடுகளிலிருந்து அதிநவீன போர் விமானங்களை  இந்தியா விலைக்கு வாங்கி வரும் நிலையில், தற்போது கப்பல் படையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.  58,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவரும் நிலையில், சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கப்பல் கட்டும் பணியில் இந்தியா தீவிரம் காட்டு வருவது, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.