மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த தொகுதியான குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சர்தார் வல்லபாய் படேல் தான் வரலாற்றில் 'இரும்பு மனிதர்' என புகழப்படுகிறார். ஆனால் உண்மையில் அமித்ஷா தான் 'இந்தியாவின் இரும்பு மனிதர்'. அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைக்க குஜராத்தும், தற்போதும் இந்தியாவும் கொடுத்து வைத்துள்ளது. பாதுகாப்பான கைகளில் இந்தியா ஒப்படைக்கப்பட்டுள்ளது என பேசினார்.

உங்களின் பாதைகளில் உள்ள பிரச்னைகளை கண்டு சோர்ந்து போகாமல் இலக்கை நோக்கி முன்னேறுகிறீர்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் மிகப் பெரிய கனவு வைத்துள்ளீர்கள். நாளை இந்தியாவின் கனவுகள் மற்றும் இலக்குகளை நீங்கள் நனவாக்குவீர்கள் என்ற நம்பிக்கையை இந்தியா கைவிடாது. மோடி அரசின் முயற்சிகளால் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி பெற்றுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய எல்லைகளில் இனி யாரும் அத்துமீற முடியாது. காஷ்மீரின் உரி தாக்குதலுக்கு பின், நாம் விமானத் தாக்குதலை நடத்தியதன் மூலம், அமைதியை இந்தியா விரும்புகிறது என்றாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இந்த உலகுக்கு காட்டியிருக்கிறோம்  என்று தெரிவித்தார்.