கொரோனா வைரசுக்கு எதிராக  இந்தியா பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக டாடா அறக்கட்டளையின் சார்பில் அந்நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா 500 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்துள்ளார் அதற்கான அறிவிப்பை அவர் குறிப்பிட்டுள்ளார் .  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அறிவித்து மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 800 தொட்டுள்ளது ,  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில் கொரோனாவை  கட்டுப்படுத்தவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் நாடு ஆயத்தமாகி வருகிறது .  இந்த வைரஸால் நாடு அதிக பொருளாதார இழப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் ,  தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் ,  வசதி படைத்தவர்கள் தாங்களாகவே முன்வந்து நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனர் .

 

இந்நிலையில் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் டாட்டா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடா கொரோனாவை  எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில் தங்கள் அரக்கட்டளையின் சார்பில் 500 கோடி ரூபாய்  நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார் .  நாடு சந்தித்து வரும்  நெருக்கடியான காலகட்டத்தில் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க இது உதவும் என தான் நம்புவதாக கூறியுள்ளார் .  பாதிக்கப்படும்  மக்களுக்கும் உதவும் வகையில் டாட டிரஸ்ட் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .  இந்த நிதி கொரோனா வைரசை எதிர்கொள்வதில் முதல் வரிசையில் நிற்கும்  மருத்துவ பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான சுவாசக் கருவிகள் தனிநபர் சோதனையை அதிகரிக்கச் செய்யும் சோதனைக் கருவிகள் கொள்முதல் செய்யவும்,  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான  வசதிகள் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலாண்மை பணிகளுக்கு  இந்த நிதியை வழங்குவதாக தெரிவித்துள்ளார் . 

 தற்போது நாடு சந்தித்துள்ள நெருக்கடியான நிலை மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று என தெரிவித்துள்ள அவர் ,  உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்  எனக் கூறியுள்ளார் .  டாடா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் .  இந்த வைரஸை எதிர்த்து போரிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார் .  இதே நேரத்தில் பல இந்திய தொழில் நிறுவனங்கள் நாட்டுக்கு நிதி வழங்க முன்வந்துள்ளன . இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்பாக மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை சுமார் 7,500 ரூபாய்க்கு வழங்க முன்வந்துள்ளது .  இந்நிலையில் பஜாஜ் குழுமம் 100 கோடி ரூபாயை வழங்க முன்வந்துள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம்.  தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு உணவவும் மற்றும் தங்குமிடம் வழங்கவும் இதை வழங்குவதாக தெரிவித்துள்ளது.   அதேபோல்  அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்தவும்,   வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்தல், தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் வாங்குதல் ,  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இது பயன்படுத்தவும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.