’கமல்ஹாசனின் மேக் - அப்பில் சிக்கல், இந்தியன் - 2 படப்பிடிப்பு நிறுத்தம். இதனால் சினிமாவை ஒத்திவைத்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.
 
கமல்!’ என்று ஏஸியாநெட் தமிழ் தொடர்ந்து சொல்லி வந்தது. இது அது உண்மையாகிவிட்டது. கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இரண்டு நாட்கள் அரசியல் நிகழ்ச்சிக்காக சென்று செட்டிலாகிவிட்டார் கமல். இந்நிலையில் அவரது கட்சியின் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட தலைமை நபர்களின் செயல்பாடுகளில் கமலுக்கே பெரிய திருப்தி இல்லை. ‘பசை’ அற்ற மனிதர்களாகவும் சிலர் இருப்பதால்  தினந்தோறும் டீ செலவை சமாளித்து கட்சியை ஓட்டவே சில மாவட்டங்களில் திணறி துடிக்கிறது கட்சி. 

சூழல் இப்படிப் போய்க் கொண்டிருக்க, கமல்ஹாசன் மீது இருக்கும் ஈர்ப்பில், திராவிட கட்சிகளில் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு இருக்கும் நபர்கள் சிலர் மக்கள் நீதி மய்யம் நோக்கி நகர்ந்து வருகிறார்கள் அல்லது நகர்த்தி வரப்படுகிறார்கள். அப்படி சேர்ந்தவர்களை பற்றி ‘இவர் அப்படியாக்கும், இப்படியாக்கும்!’ என்று கமல்ஹாசனின் கட்சி சார்பில் ஏக பில்ட் அப் கொடுத்து தூக்கிவிடுகிறார்கள். 

சமீபத்தில் புதுச்சேரியில் அப்படி வந்து சேர்ந்தவர் மாஸ். சுப்பிரமணியன் என்பவர். வந்த வேகத்தில் அம்மாநில ம.நீ.ம. செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதுவையிலும், தமிழகத்திலும் வெகுவாய் அறிமுகமாகாத இந்த நபரைப் பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியே சொந்தமாக டயலாக் எழுதி ஏக பில்ட் அப் கொடுப்பதுதான் தலைவிதியே. ம.நீ.ம.வின் மாநில செய்தி தொடர்பாளரான முரளி அப்பாஸ், இந்த மாஸ்.சுப்பிரமணியம் பற்றி...”புதுச்சேரியின் மாநில செயற்குழு தலைவராக மாஸ்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தி.மு.க.வில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. ஒரு பிரபலமான கட்சியிலிருந்து எங்களது கட்சிக்கு வந்த் பிரபலமான முதல் நபர் இவர்தான். எனவே இவரை தொடர்ந்து இன்னும் பல பிரபலமான கட்சியிலிருந்து  பிரபலமான நபர்கள் எங்கள் கட்சிக்கு வருவார்கள் எனும் நம்பிக்கை எங்களுக்கு பிறந்துள்ளது.” என்று ’பிரபலமான’ பரவசத்தில் பொங்கி வழிந்திருக்கிறார். சினிமாவில் கமல்ஹாசனின் கட்டைவிரல் நிழல் கூட பிரபலமானதாய் பார்க்கப்படும். ஆனால் அரசியலுக்கு வந்திருக்கும் அவரது நிலை இப்படியா ஆக வேண்டும், யாராவது அரதப்பழைய மாஜிக்கள் தன் கட்சிக்கு வந்தாலும் கூட அதை பெரிதாய் பேனர் கட்டி சீன் போடும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் ஆளவந்தான். இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ!