கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் நிலை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாக இருக்கிறது. அதற்கு நடைமுறை உதாரணம் ரஷ்யாவில் செயல்பாடுகள்.  உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கையில் ரஷ்யாவில் கொரோனாவின் ஆதிக்கம் கட்டுக்குள் வந்திருக்கிறது.

ரஷ்யாவில் கடைசியாக 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கிக்கொண்டிருக்கிற இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்றால், சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே,  ரஷ்ய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30- ம் தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷ்யா அப்போதே உருவாக்கியது.

ரஷ்ய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர். இது இந்தியர்களுக்கும் பொறுந்தும்.

ரஷ்யாவில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டார்கள். பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தனர். பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. சோவியத் ரஷ்யாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான் அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக ஈர்க்கும் இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இதனால், சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் மட்டுமே உள்ளது. 

ரஷ்யாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், “எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3-வது பரிசோதனையில்தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது” என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அந்நாட்டு பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷ்யாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன” என்கிறார்.

ரஷ்யாவில் மே 1-ம் தேதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கிறது என்பது வெளிநாட்டில் இருந்து கூட இந்த நாட்டினருக்கு கொரோனா வைரஸ் வந்து தாக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து குறைக்கிறது என்பதற்கான தகவலாக அமைந்திருக்கிறது.

 ரஷ்யாவின் நெருங்கிய நாடான இந்தியாவும் இதனை பின்பற்றி இருந்தால் கொரோனா வைரஸை எளிதாக கட்டுப்படுத்தி இருக்கலாம். இப்போது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக அமைந்து விட்டது.