பிரதமர் மோடியின் குப்பை அள்ளும் நாடகம் அரங்கேற்றுவதற்காக செயற்கையாக குப்பைகள் போடப்பட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை ஆகும். தமிழகத்தின் பண்பாட்டு பெருமையை வெளிப்படுத்தியதற்காக இரு நாட்டின் தலைவர்கள் சந்திப்பு அமைந்ததை தமிழ்நாடு காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, அந்த விடுதியின் பின்புறத்தில் உள்ள கடல் மணல்வெளியில் அதிகாலை நடை பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் சிதறிக்கிடந்ததை அகற்றி, தூய்மை படுத்தியதாக ஊடகங்களில் செய்தியும், புகைப்படங்களும் வெளிவந்திருக்கிறது. பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி தூய்மை படுத்தும் பணியை மூன்று நிமிட வீடியோ படம் எடுத்து தமது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை முன்னிலை படுத்தியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பயணம் ஏற்கனவே திட்டம் இடப்பட்டு மாமல்லபுரமே மாநில அரசு பணியாளர்களால் முற்றிலும் தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல் பகுதி மட்டுமல்லாமல் அதற்கு பின்புறமாக உள்ள கடற்கரை மணல் வெளியில் குப்பைகளை அகற்றும் நவீன எந்திரத்தின் மூலமாகவும், துப்புரவு பணியாளர்கள் மூலமாகவும் முழுமையாக தூய்மைபடுத்தப்பட்டது. அதற்கு பிறகு அங்கே குப்பைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இந்நிலையில் பிரதமர் மோடியின் நடைபயிற்சியின்போது அங்கே திடீரென குப்பைகள் எப்படி தோன்றியது. அப்படி குப்பைகள் அங்கு வந்திருந்தால் தமிழக அரசின் அலட்சியத்தினால் ஏற்பட்டதா? பிரதமர் மோடியின் குப்பை அள்ளும் நாடகம் அரங்கேற்றுவதற்காக செயற்கையாக குப்பைகள் போடப்பட்டதா?

மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி தமிழர் உடையோடு வலம்வந்தார். இது தமிழர்களை பெருமைபடுத்தக்கூடியது தான். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது செம்மொழி ஆய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். 47 பேர் பணியாற்றிய செம்மொழி ஆய்வு மையத்தில் இன்று 7 அலுவலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அன்று ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது. ஆனால் இன்றைய பா.ஜ.க. கூட்டணி அரசு அதற்கான நிதியை சில லட்ச ரூபாய்களாக குறைத்தது ஏன்?

தமிழ் பேராசிரியர் அமரவேண்டிய இயக்குனர் பதவியில் தமிழுக்கே தொடர்பு இல்லாத ஐ.ஐ.டி. பேராசிரியர் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டது ஏன்? அது மட்டுமல்ல, மிக மிக குறைவான எண்ணிக்கையில் பேசப்படுகிற சம்ஸ்கிருத மொழிக்கு 13 பல்கலைகழகங்கள் உள்ளன. சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மத்திய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் செம்மொழி ஆய்வு மையத்திற்கு நிதியை குறைத்து புறக்கணிப்பது ஏன். ஏன் இந்த பாரபட்சம்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் புறக்கணித்து வஞ்சிக்கிற செயல்களை தமிழர் உடை அணிந்து மூடி மறைத்துவிடலாம் என பிரதமர் மோடி கனவு காண்கிறாரா? பிரதமர் மோடியின் தமிழர் வேடத்தை கண்டு தமிழ் மக்கள் எவரும் ஏமாற மாட்டார்கள் என்பதை உறுதிபட கூற விரும்புகிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.