கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி பேசுகையில்;- கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன. ஏழை எளிய மக்களுக்கு 53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பேசிய அவர் இந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் என உறுதியளித்துள்ளார். தொழிலதிபர்களின் திறமையால் இந்தியா, மீண்டும் முழு வளர்ச்சி பெறும். ஜூன் 8ம் தேதிக்கு பின் மேலும் பல துறைகள் செயல்படத் தொடங்கும். புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா படைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் சவால்களை சந்திக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை சட்டத்தில் துணிச்சலான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க உரிமை தரப்பட்டுள்ளது. 

பொருளாதாரச் சீர்திருத்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு உறுதி பூண்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களில் வர்த்தக ரீதியானஉற்பதிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு முக்கியமானதாகும். உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவை நம்பிக்கையான கூட்டாளியாக உலகம் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் துணிச்சலான சீர்திருத்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.