கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியாவில் மக்கள் பிரச்சாரமாக  மாற்றியிருப்பதாகவும், இதுவரை இந்தியா 150க்கும் அதிகமான நாடுகளுக்கும் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவி இருப்பதாகவும்  ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் மோடி உரையாற்றியுள்ளார். டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்தியா ஐநா பாதுகாப்பு குழுவின் தற்காலிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது, சுமார் 184 நாடுகளின் ஆதரவுடன் கடந்த 8 ஆண்டுகளில் எட்டாவது முறையாக இந்தியா ஐ.நா உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெக்சிக்கோ, நார்வே ஆகிய நாடுகள் இந்தியாவுடன் தற்காலிக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு விழா வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. 

அதில் இந்த ஆண்டு ஐநா பாதுகாப்பு குழுவின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக மோடி அதில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஐ.நாவின் பல்வேறு பணிகளுக்கு இந்தியா பங்களிப்பு செய்துள்ளது. இன்று நாம் 2030 இன் நிகழ்ச்சி நிரலுக்கும், நிலையான வளர்ச்சியின் இலக்குகளுக்கும் பங்களிப்பு செய்கிறோம். உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. எங்கள் பொறுப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியா தனது பொருளாதார இலக்குகளை அடைந்தால், அது உலகின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் பயனளிக்கும் என்பதை நாம் அறிவோம். எங்கள் முழக்கம் (சப்கா சாத், சபா விகாஸ்) அனைவரும் ஒத்துழைத்து அனைவரும் வளருவோம் என்றார், கடந்த ஆண்டு காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடினோம். 6 ஆயிரம் கிராமங்களில் தூய்மை என்ற இலக்கை அடைந்தோம். நாங்கள் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறைகளை கட்டினோம். 7 கோடி கிராமப்புற பெண்கள் சுய உதவிக்குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர். 

அவர்கள் வாழ்க்கை வளர்ச்சி பாதையில் மாறியுள்ளது. எங்கள் உள்ளூர் அரசாங்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். 6 ஆண்டுகளில், நாங்கள் 40 கோடி வங்கிக் கணக்குகளைத் திறந்துவிட்டோம். 
வளர்ச்சியின் பாதையில் முன்னேறுவதோடு, இயற்கையை நோக்கிய நமது பொறுப்பையும் நாம் மறக்கவில்லை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் ஒரு பெரிய வேலை செய்துள்ளோம். 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த மிகப்பெரிய பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கினோம். பூகம்பங்கள், புயல்கள், எபோலா அல்லது மனிதனால் ஏற்படும் அல்லது இயற்கை பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், இந்தியா எப்போதும் மற்றவர்களுக்கு உதவியுள்ளது. இவ்வாறு மோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியுள்ளார்.