காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31-ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு வட்டார, நகர, மாவட்ட, மாநில கமிட்டிக்கான தேர்தல் நடைபெறும். காங்கிரஸ் கட்சியில் இனி தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நேரடி நியமனம் என்பதே இருக்காது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்படுவார். 

வரும் காலத்தில் 2014 ஆம் ஆண்டில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்றுகூட பாஜகவினர் எழுதினாலும் எழுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காரைக்குடியில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது ப. சிதம்பரம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31-ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு வட்டார, நகர, மாவட்ட, மாநில கமிட்டிக்கான தேர்தல் நடைபெறும். காங்கிரஸ் கட்சியில் இனி தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நேரடி நியமனம் என்பதே இருக்காது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்படுவார். 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடங்களில் எதிர்பார்க்காத சரிவு கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த தோல்வி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், பஞ்சாபில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. கோவாவில் முதல் மதிப்பீட்டில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அதுதான் கிடைத்திருக்கிறது. உத்தராகண்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு தவறிவிட்டது. மணிப்பூரில் கட்சிக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தன. அங்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தொடக்கம் முதலே கிடையாது. இதனால் ஒட்டுமொத்தமாக கட்சிக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சோர்வை நீக்க வேண்டும் என்றால், அது தலைவர்களால் மட்டுமே முடியாது. அடிமட்ட உறுப்பினர்களும் சேர்ந்துதான் சரி செய்ய முடியும். இளைஞர்கள் நம் கட்சிக்குள் வரவில்லை என்பதை நான் ஏற்கிறேன். பெண்களிடமும் காங்கிரஸில் சேர போதிய ஆர்வம் இல்லை. ஆனால், அதையெல்லாம் மீறி கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க முடியும்.” என்று ப. சிதம்பரம் பேசினார். இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 90-வது பிறந்தநாள் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ப. சிதம்பரம் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

அப்போது ப.சிதம்பரம் பேசுகையில், “இந்திய அரசியலில் குமரி அனந்தன் அறியாத விஷயமே இருக்க முடியாது. குமரி அனந்தன் 1933-ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் 2014 ஆம் ஆண்டில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்றுகூட பாஜகவினர் எழுதினாலும் எழுவார்கள். பாடப் புத்தகத்தின் வழியாக வரலாற்றை அறிய முடியும் என்ற நிலை மாறி, வேறு வகையான நூல்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. குமரி அனந்தன் தனது சுயசரிதையை எழுத வேண்டும். அதில், தமிழகத்தின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம் பெற வேண்டும்” என்று ப.சிதம்பரம் பேசினார்.