கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்விக்கு சபரிமலை கோயில் பிரச்னை காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இதன் கூட்டணி கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தன. பாஜகவுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்காவிட்டாலும், வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது.


இந்நிலையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோல்வியை ஆராய குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் அறிக்கை அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ‘சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ஆளும் இடது முன்னணி அரசு எடுத்த நடவடிக்கைகள் இந்துக்களை கோபம் கொள்ள செய்தது. அது கூட்டணிக்கு எதிர்ப்பாக மாறியது.
மேலும் சபரிமலை பிரச்னையை அலட்சியப்படுத்தும் வகையில் இடது முன்னணி கூட்டணியின் தேர்தல் பிரசாரமும் அமைந்திருந்தது. இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக நடந்த பிரசாரங்களை கூட்டணி கட்சிகள் தடுக்கவில்லை. இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிறுபான்மையினர் ஒருங்கிணைந்தது தோல்விக்கு மற்றொரு காரணம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக சிறுபான்மையினர் எடுத்த முடிவு இடது முன்னணிக்கு பாதகமாக அமைந்தது.’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தேர்தல் தோல்விக்கு சபரிமலை கோயில் பிரச்னை காரணம் அல்ல என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட், ‘சபரிமலை பிரச்னைதான் தோல்விக்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளது. இ.கம்யூ.வின் கருத்துக்கு மா.கம்யூ. இதுவரை வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.