இந்தியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், பாகிஸ்தானில் இருக்கும் இந்திய அதிகாரிகள் மிரட்டப்படுவதாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முகமது பைசலின் குற்றச்சாட்டு:

டெல்லியில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்திய உளவு அமைப்புகள் அடிக்கடி மிரட்டல் விடுப்பதாக புகார் வருகிறது. சமீபத்தில் எங்கள் நாட்டு துணைத் தூதரின் காரை இந்திய அதிகாரிகள் வழிமறித்து, அதில் இருந்தவர்களுக்கு சுமார் 40 நிமிடங்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற செயலை தடுத்து நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்திலும், உயர்மட்ட அளவில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலும் அவ்வப்போது முறையிட்டு வருவதாகவும் ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் முகமது பைசல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமாரின் பதிலடி:

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். அதேநேரம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இதுகுறித்து அந்நாட்டு அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளதாக ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.