எடப்பாடியும், பன்னீரும் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. யெஸ்! தனிக்கட்சி துவக்குகிறார் தினகரன். குக்கர் சின்னத்தை அவருக்கு ஒதுக்கிட தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்துதான் இந்த அதிரடியில் குதித்திருக்கிறார். மதுரை மேலூரில் கூடிய விரைவில் தினகரனின் புதுக்கட்சி மேளச்சத்தம் கேட்கப் போகிறது.

இது தமிழக அரசியலில் ஏதேனும் பிரளயத்தை உருவாக்குமா என்று சிலர் கேட்கலாம்!...அ.தி.மு.க.வில் நிச்சயம் களேபரத்தை உருவாக்கும்.
காரணங்கள்...

*    தினகரன் சாதாரண அதிருப்தியாளராக இருந்த போதே மதுரை மேலூரில் அவர் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர் தொண்டர்கள். இப்போது அவர் சிட்டிங் எம்.எல்.ஏ.,இரட்டை இலையையே முடக்கிய குக்கர் சின்னம் இப்போது அவரது கைகளுக்குள் வந்துவிட்டது ஆக இத்தனை சக்ஸஸ் செண்டிமெண்டுகளுடன் அவர் துவக்கும் புதுக்கட்சி தமிழக அரசியலை அலறவிடும் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை.

*    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு விவகாரத்தில் தினகரனுக்கு சப்போர்டீவாகவே தீர்ப்பு வருமென எதிர்கட்சியான தி.மு.க. கூட சொல்லி வருவதால் சூழ்நிலை ஒட்டுமொத்தமாக தினகரனுக்கு சாதகமாக இருக்கிறது.

*    ஒருவேளை தினகரனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்து! ஆட்சி கலைந்தால், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தினகரனை நோக்கி ஓடி அவரது புது கட்சியில் ஐக்கியமாவார்கள். ஆனால் முதல் நிலை நிர்வாகிகளால் பலவீனமான அ.தி.மு.க.வில் அமர்ந்து கொண்டு எதுவும் செய்யவும் முடியாது, இந்த கட்சியை விட்டு தினகரனின் புதுக்கட்சியில் போய் சேரவும் தன்மானம் இடம் கொடுக்காது.

*    தீர்ப்பு தினகரனுக்கு எதிர்மறையாக வந்தாலும் கூட 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தன் சொந்த புது கட்சியின் வாயிலாக எதிர்ப்பார். ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கும் அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிச்சயம் தினகரனிடம் அடிவாங்குமென்பது அரசியல் பார்வையாளர்களின் கணக்கு. அப்படியே இடைத்தேர்தலை தள்ளிப்போட்டாலும் கூட உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டும். அப்போது தினகரனின் புதுக்கட்சியானது அ.தி.மு.க.வுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருக்கப்போவது உறுதி.

*    என்னதான் கமலும், ரஜினியின் கட்சி ஆரம்பித்து பரபரப்பைக் கிளப்பினாலும் அவர்கள் அரசியலில் பூஜ்ஜியத்திலிருந்துதான் துவக்க வேண்டும். அவர்களோடு தோள் கொடுத்து நிற்கும் நிர்வாகிகளும் அரசியல் கத்துக் குட்டிகள்தான். அவர்களையெல்லாம் வைத்து எதையும் சாதித்துவிட முடியாது. எனவே அரசியலில் பழம் தின்று விதையிட்ட  பெரும் ஆளுமைகளை கொண்ட தினகரன் அணியானது பெருவாரியாக தேர்தலில் அரசியல் ஆதிக்கம் செலுத்தும். இதை புது முகங்கள் தாக்குப்பிடிப்பது சிரமமே.

*    அ.தி.மு.க.வை வீழ்த்திட வேண்டும் என்பதை ஸ்டாலினும், தினகரனும் ஒரே குறிக்கோளாக வைத்துள்ளனர். அ.தி.மு.க. எனும் கட்சியில் தினகரன் இருக்கும் நிலையில் அவரோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கைகோர்க்க ஸ்டாலினுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் தினகரனின் கட்சியானது தனிக்கட்சி எனும் நிலையில் ஸ்டாலினுக்கு அந்த தயக்கங்கள் இருக்கப்போவதில்லை.

இதையெல்லாம் தாண்டி இது நாள் வரை கட்சி இல்லாமலிருந்ததால்தான் தினகரனிடம் அ.தி.மு.க.விலுள்ள அதிருப்தியாளர்கள் இணையவில்லை. இப்போது அவர் ஒரு புதுக்குடையை உயர்த்திப் பிடிப்பதால் அதனுள் சென்று ஐக்கியமாக யாருக்கும் தயக்கம் வரப்போவதில்லை.
... ஆகவே சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரனின் புதுகட்சியானது ஆளுங்கட்சியானாலும் ஆச்சரியமே இல்லை! என்பதே அரசியல் விமர்சகர்களின் வாதம்.