நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 நாங்குநேரி தொகுதியில் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலையோடு தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிமுகவும் திமுகவும் பணப்பட்டுவாடா செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் சுற்றி வந்தாலும், அவர்களுடைய கண்ணில் மண்ணை தூவிவிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.


தொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை இன்னும் கூட்டியிருக்கிறது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள சங்கர சுப்பிரமணியன் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. எனவே தேர்தலை அக்டோபர் 21-க்கு பிறகு நடத்த உத்தரவிட வேண்டும்.  இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையிலும், விடுமுறை தினமும் வர உள்ள நிலையில் இன்று இந்த மனு விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.