அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்! ஓய்வூதியம் ரூ.1500ஆக அதிகரிப்பு! முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு
நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்;- இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் வாரியத்தினுடைய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம்" - என்று நான் குறிப்பிட்டேன். அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
“ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள்!” என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார். அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பிறந்ததில் இருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித்குமார், அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாகச் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்திருக்கிறது.
தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் இன்றைய நாளில் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பன் தனது குறைகளை இளம்வயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றிதடங்களாக மாற்றி, இப்போது நம் நாட்டிற்கே ஒரு பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறார். அண்மையில் அர்ஜுனா விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா, பேட்மிண்டன் போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்து வருகிறார்.
உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று, ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். என்ன என்று ஓரளவுக்கு நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.