income tax raid in poes garden

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் 5 மணி நேரம் நடத்திய சோதனையில் 8 பென் டிரைவ் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், சொத்துக்கள், பணப்பறிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் 1800 வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த ரெய்டில் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வைரங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா , ஷகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோரை வருமான வரித்துறையினர், சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு
ஷகிலா மற்றும் பூங்குன்றன் ஆகியோரை அழைத்துக் கொண்டு வருமானவரித்துறையினர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்கள் முன்னிலையில் பூங்குன்றன் மற்றும் சசிகலா அறையைத் திறந்து சோதனை செய்தனர்.

நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது 8 பென்டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன.

பூங்குன்றன் அறையில் இருந்து, ஜெயலலிதாவுக்கு வந்திருந்த கடிதங்களும், அவர் எழுதிய கடிதங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

பூங்குன்றனிடம் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி, அவர் அளித்த பதில்களை வீடியோவாகவும், எழுத்து மூலமும் பதிவு செய்து கொண்டனர். சோதனை முடிந்ததும் ஆவணங்களை அங்கிருந்து போலீசாரின் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் பேசும்போது வேதா இல்லத்தில் உள்ள சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகள் உள்ளிட்ட சில அறைகளில் இருக்கும் முக்கிய ஆவணங்களை சிலர் அங்கிருந்து ரகசியமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பல நாட்கள் இது குறித்து போயஸ் தோட்டம் கண்காணிக்கப்பட்டாக தெரிவித்த அவர்கள், அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சோதனை நடத்தியதாக கூறினார்.

அங்கு கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களை தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

8 பென் டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகளில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், சொத்துக்கள், பணப்பறிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தொடர்பான முக்கிய தகவல்கள் அந்த ஹார்டு டிஸ்க்குளில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

.