income tax raid in midas alchohol plant

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை:

இன்று அதிகாலை முதல், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லம், மன்னார்குடியில் உள்ள தினகரன் இல்லம், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பண்ணை வீடுகளில் சோதனை:

தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரின் பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு மற்றும் மன்னார்குடி அருகே உள்ள ரிஷியூர் பகுதியில் உள்ள திவாகரனின் பண்ணை வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள திவாகரனின் நண்பர் தமிழ்ச்செல்வன் வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றின் பெயரில் நஷ்ட கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மத்திய அரசின் உந்துதலின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. 

வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை:

சசிகலா தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திவரும் வருமான வரித்துறை, சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையிலும் வருமான வரித்துறையினர் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த மிடாஸ் மதுபான ஆலையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அதிகமான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

சசிகலா தொடர்புடைய ஒரு இடத்தையும் விட்டுவைக்காமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறையினரின் சோதனை, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.