பினாமி சட்டத்தின் கீழ் 87 பேர் மீது பினாமி சட்டம் பாய்ந்தது , கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும் முடக்கப்பட்டது

நாடுமுழுவதும் கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் வருமான வரித்துறையினர், பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், 42 வழக்குகளில் கோடிக்கணக்கிலான பணம், நகரா சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில மாதங்களுக்கு முன் மத்தியஅரசு தீவிரமாக நடைமுறைப்படுத்திய பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு கடும் அபராதம் மற்றும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், கருப்புபணத்தை ஒழிக்க வருமான வரித்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

அப்பாவி மக்கள் தங்களின் ஜன்தன் கணக்குகளில் கணக்கில் வராத பணத்தை யாரேனும் டெபாசிட் செய்ய அனுமதிக்காதீர்கள் என்று தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தனர். இது பினாமி பரிமாற்ற சட்டம் 1988ன்படி கடும் குற்றச்செயல். இது நகரும், நகரா சொத்துக்களுக்கும் பொருந்தும் என்று விழிப்புணர்வுபிரசாரம் செய்து வந்தது.

இந்நிலையில், தீவிர விசாரணைக்குபின், பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ தீவிரமான புலன்விசாரணைக்கு பின், பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் பிரிவு 24-ன்படி 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் 42 சொத்துக்கள், வங்கிகளில் இருந்த கோடிக்கணக்கான பணம், நகரா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. '' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பினாமி சட்டத்தின் படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வேறு ஒருவரின் வங்கிக்கணக்கில் அவரின் அனுமதியோடு லட்சக்கணக்கில் டெபாசிட் செய்து, அதை கமிஷன் அடிப்படையில், மீண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாகப் பெறுவது பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். ரூபாய் நோட்டு தடை காலத்தில் இந்த முறையில் டெபாசிட் செய்தவர்கள் மீதும் பினாமி சட்டம் பாயும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.