நேற்று முன்தினம் அதிகாலை நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்டர்  செய்யாதுரை செய்யாதுரை, மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் மற்றும்  பாலசுப்பிரமணியன் வீடுகள், மற்றும் அவர்களது உறவினர்கள் என்று அந்தக் குடும்பத்தை மட்டுமேதான் குறிவைத்துக் களமிறங்கினார்கள். நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய இந்த மெகா ரெய்டு சுமார் 36 மணி நேரத்துக்குப் பின் இன்று முடிவடைந்தது.    

ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் நடந்த இந்த ரெய்டில் சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 30 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 160 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 100 கிலோ தங்கம் மூட்டை மூடடையாக பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அருப்புக்கோட்டையில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழகத்தையே அதிர வைத்த இந்த மெகா ரெய்டுக்கு முன் தினமே ரெய்டு நடத்தப்பட்ட காண்ட்ராக்டர் செய்யாதுரை மகன் நாகராஜ் தனக்கு வேண்டியவர்களிடம், போன் பண்ணி, ‘கொஞ்சம் பிரச்னை.... அதனால சில பேப்பர்களை வச்சி காரை மட்டும் உங்க வீட்ல பார்க் பண்ணிக்கிறோம். எல்லாம் முடிஞ்சதும் எடுத்துக்குறோம்’’ என்று கேட்டிருக்கிறார்கள். நாகராஜனிடம் இருந்து காரியம் ஆகவேண்டிய அவசியம் இருப்பதால் அவர்களும் நாகரஜிக்கு ஓகே சொன்னார்களாம்.

இதனையடுத்து தான் பலரது வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்து கட்டுகட்டாக பணம், நாகராஜனின் நண்பர் ஒருவரின் வீட்டில் பூட்டப்பட்ட பாத் ரூமில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் என வருமானவரித் துறையினர் வாரி வந்துள்ளனர்.

பணம் தங்கத்தை வாரி வந்தது மட்டுமல்லாமல், கார்கள் பார்கிங் செய்யப்பட்ட வீடுகளின் ஒனர்களிடமும் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ‘’ அது எல்லாமே என் பணம்தான். நானே அதற்கு வரி கட்டுகிறேன்” என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தாமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார் நாகா.

முன்கூட்டியே தகவல் கிடைக்காமல் இப்படி கன கச்சிதமாக திட்டமிட முடியுமா? “ரெய்டுக்கு வரப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்துதான் நாகராஜன் தனது மூட்டை மூட்டையாக  பணத்தையும், கிலோ கணக்கில் நகைகளையும், பலகோடிகள் மதிப்புள்ள ஆவணங்களையும் இவ்வளவு பத்திரமாக கார்களில் அடைத்து ஆங்காங்கே பார்க் பண்ணச் சொல்லியிருக்கிறார்.

முன்கூட்டியே தகவல் கிடைக்காமல் இப்படி கன கச்சிதமாக திட்டமிட முடியாது. அவ்வாறு நாகராஜனுக்கு தகவல் எங்கிருந்து கிடைத்திருக்கும்? இந்த ரெய்டின் மூலம் இறுதியாக பாதிக்கப்படப் போவது என்னவோ அந்த அதிகார மையம் தான், எனவே தகவல் கசிந்த அடுத்த நொடியே அருப்புக்கோட்டையை நோக்கி அடித்தது ரிங்... போனை எடுத்த முன்னாள் ஆட்டுத்தோல் வியாபாரியின் மகனிடம்,  ‘காப்பாத்திக்கப்பா’ என்று  சொல்லவே,, நாகாவோ அவசரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கரன்சியை கார்களில் மூட்டை மூட்டையாக அனுப்பியிருக்கிறார்.

வருமான வரித்துறை ரெய்டில் இருந்து தப்பிக்க அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுக்கு கார் அனுப்பி பதுக்கியது பக்கா டெக்னிக்தான். ஆனால், மண்டையை மறைத்தும் கொண்டையை மறைக்காமல் போனதைப்போல, பார்க்கிங் செய்யப்பட்ட கார்கள் சாவிகளையும் தன் வீட்டில் வைத்திருந்தாரே அடடடா... என்ன ஐடியா!!!