Income requests will be sent to the Income Tax Department to check the payment of the payments
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் கிடைத்தால் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்து விட்டு செல்லுங்கள் என பாஜக தமிழிசை தெரிவித்து வருகின்றார்.
மேலும் எதிர்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்படும் இடங்களில் தேவைக்கு ஏற்ப வருமான வரித்துறை குழுக்கள் அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்டவர்கள் தங்களது கார் போன்ற சொந்த வாகனங்களை, வெளியூரில் இருந்து தேர்தல் பணிக்காக வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டால் ஆர்.டி.ஓ. மூலம் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் காவல் ஆய்வாளர் முதல் காவல் ஆணையர் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
