தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிதாக வேறு கட்சிகள் இணைவது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரியும்.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் நடக்காது. பாஜக தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் இருப்பதாக கூறுகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருக்கின்றன. மார்ச் மாதமே தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்.  நான் அரசியலில் இருக்கும் வரை எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிடுவேன். பள்ளி பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.