மறைந்த திமுக தலைவர்  கருணாநிதியின், சொந்த தொகுதியான திருவாரூரில், தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தயாராகி வருகிறார் என கூறப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து அழகிரி திருவாரூர் தொகுதியிலும், டி.டி.வி.தினகரன் சார்பில் ஒருவர் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தான்  இம்மாதம் 15 ஆம் தேதி  அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, விழுப்புரத்தில், தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.. அதுவரை அமைதியாக இருந்து விட்டு, விழா முடிந்ததும், திருக்குவளையில் இருந்து  தன் சுற்றுப்பயணத்தை துவக்க, அழகிரி திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் திருவாரூர் தொகுதியில், அழகிரி போட்டியிடுவது உறுதி ஆகி விட்டால், அவரை வீழ்த்துவதற்கு, அவரது சகோதரி செல்வியை தி.மு.க., வேட்பாளராக களமிறக்க வேண்டும் என, ஸ்டாலின் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..கருணாநிதி போட்டியிட்ட, சென்னை - சேப்பாக்கம், திருவாரூர் தொகுதிகளில், தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம், செல்விக்கு உண்டு.அந்த அனுபவத்தைக் கொண்டு அவரை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். செல்வி போட்டியிட விரும்பவில்லை என்றால், கனிமொழியை நிறுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜ்ய சபா, எம்.பி., பதவி காலம், அடுத்த ஆண்டு முடிகிறது. அடுத்த ஆண்டு, மே மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட, கனிமொழி  ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நடக்கவுள்ள இடைத்தேர்தலில், கட்சி வெற்றி பெற்றால் தான், அவரது எதிர்கால அரசியல் பயணமும் வெற்றி பெறும். எனவே, வெற்றி வியூகம் அமைத்து, தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. அழகிரியை வீழ்த்த, எந்த நிலைக்கு இறங்கவும், ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..