'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரசார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து தொடங்கினார். அங்கே கூடியிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி பேசுகையில், “பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும்.
ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடத்தப்படும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார். தமிழகத்தில் பெண் கல்விக்காக திமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. தற்போது பெண் கல்வி கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை.” என்று கனிமொழி பேசினார்.