தமிழகத்தில் அமலானது தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு... வெளியே சுற்றினால் காத்திருக்கு நடவடிக்கை..!
தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கான தளர்வுகள் எதுவுமற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. தற்போதைய நிலையில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை எட்டிவிட்டது. தினசரி மரணங்களும் 400-ஐ கடந்துவிட்டன. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனாவைக் கட்டுபடுத்த முழு ஊரடங்குதான் உதவும் என்ற முடிவுக்கு அரசு வந்ததால், மே 24 முதல் 31 வரை தளர்வுகள் எதுவுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒருவார காலத்துக்கு திறக்கப்படாது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், குடிநீர் சேவை, பார்சல் உணவு சேவை தவிர்த்த எந்த சேவையும் இயங்காது. பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது. மருத்துவ உதவி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள மட்டுமே மருத்துவமனை அல்லது மையங்களுக்கு செல்லலாம்.
முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், முக்கிய சாலைகளை போலீஸார் தடுப்புகள் மூலம் அடைத்துள்ளனர். விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.