சிங்கப்பூரில் கொரோனா  அச்சுறுத்தலையும் மீறி  பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் "பீப்பிள் ஆக் ஷன்" கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

சிங்கப்பூரில் பிரதமர் 'லீ செய்ன் லுாங்' தலைமையிலான 'பீப்பிள் ஆக் ஷன்' கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ செய்ன் லூங் முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு ஓட்டுச்சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக ஓட்டளித்தனர்.இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

 இதில், ஆளும் 'பீப்பிள் ஆக் ஷன்' கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இக்கட்சி, 61.24 சதவீத ஓட்டு விகிதம் பெற்றது. இது கடந்த 2015ல் பெற்ற ஓட்டு விகிதத்தை (69.9%) விட குறைவு.வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் லீ செய்ன் லுாங்..., "பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர்நோக்கிய வலி, பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது" என்றார்.