In RK Nagar - DMK can not always win

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகரில் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இன்று காலையில் துவங்கிய வாக்கி எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் இருந்தே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். ஒவ்வொரு சுற்றுகள் முடிவிலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 14-வது சுற்றுக்கள் முடிவில் தினகரன் 68,302 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் இரண்டாம் இடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றுக்களின் முடிவில், தினகரன் முன்னிலை வகித்து வருவதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவின் தம்பிதுரை, ஆர்.கே.நகரில் திமுகாவால் வெல்லவே முடியாது என்பதை, தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 2ஜி விவகாரத்தில் வெளிவந்த தீர்ப்பு கூட திமுகவிற்கு கை கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது என்றார்.

2ஜி விவகாரத்தில் திமுக ஊழல் செய்திருக்கிறது என்பதுதான் மக்களின் தீர்ப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்.கே.நகரில், எப்போதுமே திமுக வெற்றி பெற முடியாது என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.

அதிமுக வேட்பாளரான மதுசூதன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், அவரின் தோல்வி குறித்து பதிலளிக்காத எம்.பி. தம்பிதுரை, திமுகவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 

இதனால், தம்பிதுரை, தினகரனுக்கு ஆதரவாக உள்ளாரோ என்ற அச்சம் எடப்பாடி-பன்னீர் அணிக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாது தம்பிதுரை எம்.பி.-யின் இந்த பேச்சு யாருக்கு ஆதரவாக உள்ளது என்று நெட்டிசன்களும் ஒருபக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.