வருடாவருடம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று மாநாடு நடத்துவது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வழக்கம். அண்ணாவை போற்றுவதில் பெரிய கழகங்கள் இரண்டையும் விட எப்போதும் இச்சிறு கழகம் விஞ்சி நிற்பதை வான் அதிர சொல்லும் வைபவம் இது. பொதுவாக இந்த மாநாட்டு சமயங்களில் பொங்கி எழுவார் புரட்சிப் புயல் வைகோ. 

கடந்த ஆண்டு இந்த மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே நடந்தது. அப்போதுதான் மக்கள் நல கூட்டணியை முழுதாய் தலைமுழுகிவிட்டு, தி.மு.க.வுடன் மிகப் பெரிய நட்பினை ம.தி.மு.க. நாடி நின்ற நேரம் அது. எதிர்வரும் நாடாளுமன்ற  தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணியில் தாங்கள் இருக்கப்போகிறோம் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த நிகழ்வு. தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இந்த மாநாட்டுக்கு சிறப்பு உரையாற்ற அழைத்து, அழைப்பிதழில் பெயரும் போட்டிருந்தார் வைகோ. ஆனால் விழுப்புரத்தில் கழகத்தின் மாநாடு இருந்தது. இருந்தாலும் அன்று காலையில் கூட ஈரோட்டிலிருந்து சில மணி நேர கார் பயண தூரத்தில் ஒரு நிகழ்வுக்கு வந்துவிட்டுதான் சென்றார் ஸ்டாலின். ஆனால் ம.தி.மு.க.வின் விழாவுக்கு அவர் வரவில்லை. தி.மு.க. சார்பில் துரைமுருகன் கலந்து கொண்டு மேடையில் தெறிக்கவிட்டார் வைகோவை.

 

ஸ்டாலின் கலந்து கொள்ளாதது வைகோவுக்கு மன கஷ்டமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் துவங்கின. தி.மு.க. கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை வைகோ சொல்லாமல் சொல்லிய பிறகும் கூட “ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் எங்கள் நண்பர்கள்தான். கூட்டணி கட்சியினரல்ல.” என்று துரைமுருகன் ஒரு வேட்டை வெடித்தார். இதன் பின் வைகோவும், திருமாவும் ஓடோடிச் சென்று ஸ்டாலினை சந்தித்துக் கூட்டணியை உறுதி செய்தனர். அதன் பின் தேர்தலில் கூட்டணி, வெற்றி, வைகோ தி.மு.க.வின் தயவால் ராஜ்யசபா எம்.பி.யான கதையெல்லாம் ஊர் அறிந்தது. இந்நிலையில் இதோ இந்த வருடத்தின் செப்டம்பர் 15 நெருங்கிக் கொண்டிருக்கிறது.  கடந்த வருடம் போல் இந்த வருடமும் தங்கள் மாநாட்டு மேடையில் ஸ்டாலின் ஏறிவிடாமல் போய்விட கூடாது! என்று வைகோ குறியாய் இருக்கிறார். அதன் விளைவு, இந்த முறை மாநாட்டை தென் தமிழகத்திலோ, மேற்கு தமிழகத்திலோ, மத்திய தமிழகத்திலோ இல்லாமல் நேரடியாக சென்னையிலேயே நடத்துகிறார். 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது ம.தி.மு.க.வின் “பேரறிஞர் அண்ணா 111வது பிறந்தநாள் விழா மாநாடு”. இந்த மாநாட்டை தொடங்கி வைப்பவரே ஸ்டாலின் தான். இதற்காக “தி.மு.க. தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின்” என்று விளம்பரங்கள் மின்னுகின்றனர். வைகோவுக்கு கூட ‘கழக பொதுச்செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்’ என்பதோடு சிம்பிளாக முடித்துள்ளனர். ஆக ஸ்டாலினை இங்கே பெரிதாய் எதிர்பார்க்கிறார் வைகோ. இதை அவரது கட்சியினரும் அழுத்திச் சொல்லி ‘தளபதியின் வசதிக்காகவே (ஆஹாங்!....) சென்னையிலேயே மாநாட்டை நடத்துகிறார் எங்கள் தலைவர்’ என்கிறார்கள். 
நடக்கட்டும், நடக்கட்டும்!
-