திரைப்படங்களில் தனித்தனியாக செயல்பட்டதுபோல, அரசியலிலும் ரஜினியுடன், தாம் வேறுபடுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்மீகத்தில் நாட்டமுடைய ரஜினி குறிப்பிட்ட ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால், தமக்கும் அவருக்கும் வேறுபாடு எழுவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் தாங்கள் தனித்தனியாகப் பிரிவதும் தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமக்கு எந்த மதமும் கிடையாது என்றும், அனைத்து மதங்களையும் தாம் சமமாக மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

திரைப்படத் தொழிலிலேயே இருவரும் ஒன்றிணைந்து செயல்பட இயலவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், அவர் பாணியில் படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தாம் எடுத்த படங்கள் போல, ரஜினியும் நடிக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலிலும் இந்த வேறுபாடு நீடிக்கும் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், இதற்காக பல விஷயங்களில் அவர் கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.