இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. ஆக்ஸிஜன் உற்பத்திகாக ஆலையை திறக்கலாம் என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்த போதும், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது தவறு சரியா? என கேள்வி எழுப்பியதோடு ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்றும் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை குறித்து தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டியுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் எல்.முருகன், கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், பாமக சார்பில் மாநில துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்கம் முதல் போராடிவரும் மதிமுக, விசிக, நாம் தமிழர், மற்றும் மநீம ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசின் உயர்மட்ட குழு கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என திமுக, காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான அளவிற்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸினின் பெரும்பாலான அளவு தென் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்றும், ஆக்ஸிஜன் உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது என்பதை உயர்மட்ட குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
