தமிழகத்தில் சட்டத்திற்கு எதிரான போக்கு தொடர்ந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என விலங்குகள் நலவாரியம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கீழ், விலங்குகள் நல வாரிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த விலங்குகள் நல வாரியம்.

இது தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த்து. அதோடு விலங்குகள் நல வாரியம் தனது ஜல்லிக்கட்டு விரோதப் போக்கை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தன்னெழுச்சி போராட்டங்கள் நடந்து வருவது, விலங்குகள் நல வாரியத்தை கதி கலங்கச் செய்துள்ளது. இந்நிலையில் வாரிய உறுப்பினர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஜெய சிம்ஹா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் முதலமைச்சரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த செயல்பாடுகள் அரசிலமைப்பு சட்டத்திற்கு அவமதிப்பதாக உள்ளன. இவை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள். சட்டத்திற்கு எதிரான போக்கு தமிழகத்தில் தொடர்ந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 356யை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த கடித்த்திற்கு எந்த மாதிரியான நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.