சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் தெரியவரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 3 வருடம் 8 மாதங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 3 மாத காலம்தான் (ஜனவரி வரை)அவர் சிறையில் இருக்க வேண்டி வரும். ஆனால் நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலையாகிவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில்;- அக்டோபர் 27ம் தேதியான இன்று வரை தசரா விடுமுறை. இதற்கு பிறகு சசிகலா விடுதலை தொடர்பாக நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இருந்து தகவல் வந்ததும் அபராதத்தை செலுத்துமாறு சசிகலா கூறியுள்ளார். அபராதம் செலுத்தும் நடைமுறை ஒரு நாளிலும் முடியலாம், ஓரிரு நாளும் ஆகலாம்.

சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்ற 36வது சிறப்பு  நீதிமன்றத்தில் பணி முடிந்துவிட்டது. தற்போது, அபராதம் செலுத்துவது தொடர்பான உத்தரவை பொறுப்பு நீதிமன்றம் தான் பிறப்பிக்கும். உத்தரவு வந்ததும் அபராதத்தை செலுத்திவிடுவோம் அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் சசிகலா விடுதலை செய்யப்படுவார்  என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.