"மாநிலத்தில் அவசரகால நிலைக்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை பிறப்பிக்காமல் மத்திய தலைமை அமைதி காக்கிறது. ஆக,  மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ரகசிய புரிந்துணர்வு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது” 

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதால் 355-ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திள்ளது.

8 பேர் எரித்துக் கொலை

மேற்கு வங்க மாநிலத்தில் பீர்பூம் மாவட்டத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கொலத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற தொடங்கியுள்ளன. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.

காட்டுமிராண்டித்தன சம்பவம்

அப்போது அவர் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மாணவர் தலைவர் அனீஸ் கான் அவரது வீட்டின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு, மர்மமாக மரணம் அடைந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை மறைத்து விட்டு ஆளுங்கட்சி விசாரணையை நடத்தி வருகிறது. இப்போது பீர்பும் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்து கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜல்டா நகராட்சி கவுன்சிலர் தபன் காண்டு மிக நெருக்கமான தொலைவில் இருந்து சுட்டு கொல்லப்பட்டார். அதிலும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

இந்தத் தொடர் சம்பவங்களால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதையெல்லாம் இந்தச் சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன. எனவே, இந்தச் சூழலில் மாநிலத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 355வது சட்டப் பிரிவை மேற்கு வங்காளத்தில் உடனே அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் அவசரகால நிலைக்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை பிறப்பிக்காமல் மத்திய தலைமை அமைதி காக்கிறது. ஆக, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ரகசிய புரிந்துணர்வு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.