பொதுவாகவே திமுகவினர் நாகரிகம் தெரியாதவர்கள் என அமைச்சர் ஆர். பி உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை இணைத்து கொச்சையாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

தமிழக வரலாற்றிலேயே பச்சைக்கொடி அசைத்து பறிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு உரிமையை பெற்றுத் தந்தவர் முதல்வர் எடப்பாடியார், முதல்வர் வரும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வரவேற்பு தருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற காட்சியை பார்க்க முடியாது. மாநில முதல்வர் என்பவர் மக்கள் தலைவர் ஆவார். அப்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மக்கள் தலைவர் என்றும் பாராமல் அவரை விமர்சித்து வரும் உதயநிதி பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 

அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் தான் திமுகவின் வளர்ப்புகள், கலாச்சாரம், பண்பாடு பற்றி தெரியாதவர்களுக்குதான் பெண்களைப் பற்றி மதிப்பும் தெரியாது. அவர்களை மதிக்கவும் தெரியாது. பொதுவாகவே திமுகவினர் என்றால் நாகரீகம் தெரியாதவர்கள். பக்குவம் இல்லாமல் பேசிய உதயநிதிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். உதயநிதி வரும் இடமெல்லாம் உதயநிதி காது சவ்வு கிழியும் வரை கண்டனக் குரலை பெண்கள் எழுப்பவேண்டும். இனிமேல் தமிழக முதல்வரையும்  பெண்களையோ எவரும் தவறாக பேசக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.