தினகரனின் இமாலய வெற்றி அ.தி.மு.க. அமைச்சர் பரிவாரங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறதென்றால் அதற்கு நிகராக இளவரசியின் டீமும் இருளடித்துக் கிடக்கிறது. 

சசிகலாவின் அண்ணி இளவரசி சிறைபுகும் முன் தமிழக  மண்ணுக்காக விட்டுச்சென்ற இரண்டு போர் வாள்களாவன: கிருஷ்ணபிரியா மற்றும் விவேக். இளவரசியின் மகள்  மற்றும் மகன். 

இவர்களிருவரும் சமீபகாலமாக தினகரனுக்கு எதிரான அரசியல் அக்குறும்புகளில் நாட்டம் காட்டி வந்தார்கள். ரெய்டு நடந்ததை மத்திய அரசின் உள்நோக்கமுடைய செயல் என்று தினகரன் விமர்சித்து வந்த வேளையில், அது அப்படியான செயலில்லை என்று எதிர்ப்பு கவுன்டரை தட்டிவிட்டார்  விவேக். 
அதேபோல் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் ரெய்டுக்கு உள்ளானபோதும் இப்படியான உரசல்கள் இருவருக்குமிடையில் எழுந்தன. 

விவேக் போலவே அவரது அக்கா கிருஷ்ணபிரியாவும் தினாவை உரசுவதிலேயே குறியாக இருந்தார். ஆர்.கே.நகர் வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஒரு வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா மருத்துவமனை பெட்டில் இருக்கும் காட்சிகள் அதிலிருந்தன.

ஜெயலலிதாவை பிரம்மாண்டமாகவே பார்த்துப் பழகிய தமிழ் மக்களுக்கும், அரசியல் புள்ளிகளுக்கும் நைட்டி அணிந்து, முகமூடி கழுத்தில் தொங்க, கசாமுசாவென பின்னப்பட்ட தலைமுடியுடன், கணுக்காலுக்கு மேலேறிய நைட்டியுடன் பரிதாபமாக அவர் அமர்ந்திருக்கும் காட்சிகள் அதிலிருந்தன.

 
இந்த வீடியோ வெளியிடலை கடுமையாக விமர்சித்தார் கிருஷ்ணப்பிரியா. 
ஆக இப்படி இளவரசியின் பிள்ளைகள் தினகரனை விமர்சிக்கும் செயலைக்கண்டு தினாவின் கூட்டம் அதிர்ந்ததோடு மட்டுமில்லாமல் பழனி-பன்னீர் அணியிலிருந்து யாரோ இவர்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்கிறார்களோ? என்றும் டவுட்டினார்கள். 

இந்த விவகாரம் அப்படியே சிறையிலிருக்கும் சசிகலாவின் காதுகளுக்கு போக, அவர் இளவரசியை கண்டிக்க, அவரோ  தன் பிள்ளைகளை கண்டித்தார். ஆனாலும் விவேக்கும், பிரியாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் இமாலய வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தேவையில்லாமல் அவரை சீண்டி தப்பு பண்ணிட்டோமோ? பன்னீர் - பழனிசாமி அணியால சிக்கல்னா நமக்கு கைகொடுக்க இருக்குற ஒரே ஆள் தினகரன் தான். ஒரே குடும்பத்துக்குள்ளே இருந்துகிட்டே அவரை காயப்படுத்திட்டோமே!? என்று புலம்பிக் கொட்டியுள்ளனர். 

இவர்களை தினகரனிடம் அழைத்துப் போய் சமரசம் செய்து வைக்க ஒரு டீம் தயாராகியிருக்கிறது.