தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் வியூகங்களை வகுத்துவருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப் பற்றி டிசம்பரில்தான் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.கே. கட்சி. அக்கட்சிக்கு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினராகவே பாரிவேந்தர் உள்ளார். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பாரிவேந்தரை வீட்டுக்கு சென்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திடீரென சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.

 
திமுக கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி தலைவரை பாஜக தலைவர் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும்வரை பாஜக கூட்டணியில்தான் ஐஜேகே இருந்தது. ஆனால், அதன் பிறகு திமுக கூட்டணிக்கு மாறியது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் பாஜக கூட்டணியில் இணையும் முயற்சியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இரு தரப்பும் இது மரியாதையான சந்திப்பு என்றே தெரிவித்துள்ளன.