பல மாதங்களாக தோழமை கட்சிகளாக இருந்து வரும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் தாமதம் காட்டி வரும் திமுக, கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டணிக்கு திடீரென வந்த ஒரு கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெறும் எனக் கருதப்பட்டது. ஆனால் அங்கு பாமக இருப்பதால் விலகி வந்த ஐஜேகே கமல்ஹாசனின் மக்கல் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

 

திமுகவுடனான தோழமை கட்சிகள் தொகுதிகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஐஜேகே உள்ளே நுழைந்து ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே இந்திய முஸ்லீம் லீக் 1, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, காங்கிரஸ் கட்சிக்கு 10, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2  தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக தற்போது ஐஜேகே கட்சிக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்டசியின் நிறுவனர் பாரிவேந்தரின் மகன் ரவிபச்சமுத்து, ‘’ திமுக கூட்டணியில் ஒரு தொகுதையை பெற்றுள்ளோம். நாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுள்ளோம். தொகுதி பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம். கள்ளக்குறிச்சி கிடைக்காத பட்சத்தில் தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் களமிறங்க முடிவு செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.