அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் அரசியல் பண்பாடு இன்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவிக்காத கருத்தை, தெரிவித்தது போல போலியான கருத்தைப் பரப்பி வருகின்றனர்.

இந்திய அரசியல் வரலாற்றில், சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அமைச்சராக இருக்கும்போதே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆ.ராசா. அப்படிப்பட்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தோ, முதல்வர் பழனிசாமி குறித்தோ, அதிமுக குறித்தோ பேசுவதற்குத் தகுதி கிடையாது. 18 மாதங்கள் சிறையில் இருந்த ஆ.ராசாவுக்கு ஊழலைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. கருணாநிதி கடந்த 50 ஆண்டு காலம், அவரே தேர்தலைச் சந்தித்தார். தலைவர்களை எதிர்கொண்டார். ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரிடம் குறிப்பிட்ட தொகைக்கு திமுகவை விற்றுவிட்டு, போலி நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

முதல்வர் பழனிசாமியை எதிர்த்து 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் திராணியில்லாதவர் மு.க.ஸ்டாலின். தேர்தலைச் சந்திக்க களத்துக்கு வர வேண்டும். அதிமுகவை எதிர்க்க அவருக்கு தைரியம் இல்லை. ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை. கீழ்த்தரமாகப் பேசுவதை மு.க.ஸ்டாலின், ஆ.ராசா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் கோவைக்கு வந்தால் வெளியே நடமாட முடியாது என எச்சரிக்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன்னர், நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி, அவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா பற்றி ஆ.ராசா பேசத் தகுதியில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆ.ராசா ஆகியோர் குறித்து முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை. ஆ.ராசா போன்றவர்களுக்கு முதல்வர் வந்து பேசத் தேவையில்லை. ஆ.ராசாவுடன் விவாதத்துக்கு நானே தயாராக உள்ளேன். கோவையில் விவாதத்தை வைத்துக் கொள்வோம்.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர் மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கே துரோகம் செய்துள்ளனர். முதல்வர் கேட்கும் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் கூறத் தயாரா? திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வேறு வழியில்லாததால் கூட்டணி அமைத்துள்ளனர். ஆ.ராசா செய்த ஊழல்களில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.