If you leave us there is no other way for you to come to Rahul by thirunavukkarasar
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்து ஸ்டாலின் வீட்டில் கிடா விருந்து சாப்பிட்டுவிட்டு போனதிலிருந்து காங்கிரஸுக்கு கிலி போட்டு ஆட்டுகிறது. ’பி.ஜே.பி.யும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம்!’ என்று தேசிய அளவில் அமையும் மூன்றாவது அணியில் தி.மு.க. இணைந்துவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸின் நிலை திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் கதிதான்! இங்கே போறதா, அங்கே போறதா என்று கரைசேர வழி தெரியாமல் கதறி அழுதுவிடும்.
காங்கிரஸுக்கு வந்திருக்கும் இந்த கவலை நிலையை சுட்டிக்காட்டி அரசியல் விமர்சகர்கள் ’காங்கிரஸை கழற்றிவிட போகிறாரா ஸ்டாலின்?’ என்று கொஸ்டீன் கொக்கிப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி மிக வெளிப்படையாக இப்போது பேசியிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர், ‘எங்களை கைவிட்டுடாதீங்க. உங்களை விட்டா எங்களுக்கு யாரு இருக்கா சாமீ!’ என்கிற ரீதியில் தி.மு.க.வை இறுகப்பற்றி காங்கிரஸ் கண்ணீர் விடுவது போல் பேசியிருக்கிறார் இப்படி...
“ஸ்டாலினோ அவரது கட்சியின் பிற தலைவர்களோ ‘நாங்கள் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம்’ என்று எப்போதாவது சொன்னார்களா? இல்லையே. காவிரி விவகாரம் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளிலும் தி.மு.க.வுடன் இணைந்துதான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை எல்லோரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க இந்த அரசியல் பார்வையாளர்கள் ஏன் எங்களை தி.மு.க. கழற்றிவிடப்போகிறது என்று சந்தேகப்படுகிறார்கள்? கூட்டணியிலிருந்து காங்கிரஸை தி.மு.க. ஒரு போதும் வெளியேற்றாது.
எங்கள் கூட்டணியில் பிளவே இல்லைய்யா. பிளவு இருந்தால்தானே வேறு எந்த கட்சியுடன் கூட்டணி சேருவதுன்னு யோசிக்கணும்? நாங்க ஒண்ணு மண்ணாதானே இருக்கோம்.
தேசிய அளவில் தேர்தல் சமயங்களில் எல்லாம் மூன்றாவது அணி பற்றிய பேச்சு வருவது இயல்புதான். ஆனால் அது இதுவரையில் பலன் கொடுத்திருக்கிறதா? இல்லை! இந்த முறை என்னாகுமென்று பார்ப்போம்.

ஆனால் ஒன்று மோடிக்கு மாற்று ராகுல்தான், ராகுல் மட்டுமேதான்! என்பதை மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் தலைவர்கள் விரைவில் உணர்வார்கள்.” என்றிருக்கிறார்.
இதன் மூலம் மூன்றாவது அணியில் இணைவது போல் தங்களுக்கு பூச்சாண்டி காட்டும் ஸ்டாலினுக்கு, ‘ராகுலை விட்டால் வேற ஆள் இல்லை’ என்று மறைவாக குத்திக் காட்டியிருக்கிறார் அரசர் என்கிறார்கள்.
