தந்தை பெரியாரையும், அதே நேரத்தில் கந்தசஷ்டி கவசத்தையும் இழிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான  மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் நிலையாக இருக்கிறது. யார் தவறு செய்தாலும் நாம் கண்டிப்போம். கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்ததை மருத்துவர் அய்யா கண்டித்து அறிக்கை வெளியிட்டார். பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார். பாமகவின் கொள்கை முன்னோடிகளில் ஒருவர் தந்தை பெரியார். பெரியாரை தவறாக பேசுவது, ஆபசமாக பேசுவது, அவரது சிலையை இழிவு செய்வது ஆகியவை சமீப காலங்களில் நடந்து வருகிறது. 

இவையெல்லாம் மறைமுகமாக, கோழைத்தனமாக அரசியல் செய்வது ஆகும். அக்காலத்தில் நமது சமூகநீதிக்காக பாடுபட்டவர்களை இழிவு செய்வது மிகத்தவறான போக்கு. அதே போன்று, தமிழ் சாமிகளை, கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்துவதை ஏற்க முடியாது. சில பேருக்கு கடவுள் நம்புக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் மூடிக்கொண்டு இரு. மாறாக, மற்றவர் நம்பிக்கையை, கடவுளை எதற்கு அசிங்கப்படுத்த வேண்டும்? 

எதற்காக இழிவு செய்ய வேண்டும்? கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்தக் கூடாது. பெரியார் சிலையை உடைப்பது, கடவுள் நம்பிக்கையை இழிவு செய்வது - இவையெல்லாம் மக்களை உண்மை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது. நமது இளைஞர்கள் தெளிவாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சதிகளில் சிக்கக் கூடாது. நமக்கு ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும் தான்." எனக் கூறினார்.