எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் இன்னும் 20 நாட்களில் திருச்சியை நோக்கி 10 லட்சம் பாஜகவினர் கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். 

எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் இன்னும் 20 நாட்களில் திருச்சியை நோக்கி 10 லட்சம் பாஜகவினர் கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். திருச்சி போராட்டம் திருப்புமுனையாக அமையும் என்றும் அது திமுகவின் அஸ்தமனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக அதிமுக தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. எதிர்க் கட்சி அதிமுக என்றாலும் தாங்கள் தான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது ஒருபுறமிருக்க தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என தொடர்ந்து அண்ணாமலை கூறிவருகிறார்.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமைச் செயல முற்றுகைப் போராட்டம் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்டது. ஆனால் காவல்துறையில் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாறாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தவே அனுமதி வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த அரசு திராவிட மாடல் சினிமா அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை இதுவரை ஏன் நிறைவேற்றவில்லை, டீசல் விலையை குறைக்காதது ஏன்? துயர் இதுகுறித்து ஆர்எஸ் பாரதியிடம் கேட்டால் அவர் டிஆர் பாலுவுடன் கேளுங்கள் என்கிறார். ஏனென்றால் டி.ஆர் பாலு தான் தேர்தல் அறிக்கையை தயாரித்ததாக கூறுகின்றனர்.

இது குறித்து முதலமைச்சரிடம் கேட்டால் அவரும் டி.ஆர் பாலுவிடம் கேளுங்கள் என்கிறார். அப்படி என்றால் டி.ஆர் பாலுவை முதலமைச்சராக்குங்கள். பாஜகவினருடன் கோட்டையை நோக்கி வரப்போகிறேன் என்று தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலின், டெல்டா பகுதிக்கு சென்று விட்டார். அவர் எங்கு சென்றாலும் நாங்கள் விடப்போவதில்லை, பிரதமர் நரேந்திரமோடி கச்சத்தீவை மீட்பார், கச்சத்தீவை மீட்க சொல்வதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. ஊடகம் பத்திரிக்கை காரர்களுக்கு எதிராக பேசியதாக கூறி என்னை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நேர்மையான பத்திரிக்கையாளர்கள் என்னை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இயேசுநாதர் போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட மாட்டோம். 

ஊடகங்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது, ஊடகம் என்ற பெயரில் ஒரு ஓநாய் கூட்டம் இருக்கிறது. எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் திருச்சியை நோக்கி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும், இதில் 10 லட்சம் பாஜகவினர் கலந்து கொள்வார்கள், திருச்சி போராட்டம் திருப்புமுனையாக இருக்கும், திமுகவிற்கு அஸ்தமனம், திமுகவின் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. போராட்டத்திற்கும் கைதுகளுக்கு பாஜகவினர் தயாராக இருக்கவேண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாஜக தொண்டர்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.