ஆன்லைன் மணல் பதிவை தினந்தோறும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆன்லைனில் மணல் விற்பனை பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெறும் இந்த பதிவால் பாதிப்பு ஏற்படுவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றி திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், மணல் விற்பனை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல்  4.24 மணி வரை மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. 

இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மணலை நம்பி பிழைத்து வரும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பிழைப்பின்றி கடன் கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுபோல் குறைந்த நேரத்தில் ஆன்-லைன் பதிவு செய்வதால் குறிப்பிட்ட முக்கிய புள்ளிகள் மட்டுமே இதில் பயன்பெறுகின்றனர். தங்களைப் போன்ற சாதாரண டிப்பர் லாரி உரிமையாளர்கள் பயன் பெற முடிவதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இரண்டரை யூனிட் மணல் 7 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தற்போது மணல் விலையேற்றத்தால் எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் 5,500 என விற்பனையாகிறது. கொள்ளிடத்தில் நடுவில் உள்ள திட்டுகளை மட்டும் எடுத்தாலே 20 ஆண்டுகளுக்கான மணல் கிடைக்கும். இதனால் மணல் தட்டுப்பாடு  இருக்காது. எனவே அரசு இதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும், மேலும் ஆன்லைன் மணல் பதிவை வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் என்பதை மாற்றி தினந்தோறும் ஆன்லைனில் முன்பதிவு  செய்ய அரசு முன் வர வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.