இந்த பார்முலா எலக்ஷன் கமிஷன் அனுமதித்தால் இனி தமிழகத்தில் எந்த தேர்தலும் நியாயமாக நடக்காது!அலறும் கிருஷ்ணசாமி
இதையெல்லாம் கண்டுகொள்வதற்குத் நேரமும் கிடையாது, தனது வேலையும் கிடையாது என்று தேர்தல் ஆணையமே தீர்மானித்துவிட்டது போல் தெரிகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எல்லையையும் தாண்டி இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தேர்தலில் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறப் போகிறாரா? அல்லது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.முக. வேட்பாளர் வெற்றி பெறப் போகிறாரா? என்பதைக் காட்டிலும், இத்தேர்தல் எந்தளவிற்குப் புதுப்புது உத்திகளோடு நடத்தப்படுகிறது என்பதே அனைத்து அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.
பொதுவாக, தமிழக இடைத்தேர்தல் என்றாலே நேரடிப் பணப்பட்டுவாடாக்களும், பரிசுப் பொருட்களும் வீடு வந்துசேரும்; பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பெரியபெரிய பொருட்கள் வழங்கப்படுவதாக இருந்தால் அவற்றுக்கான டோக்கன்கள் முதலில் வழங்கப்படும்; தேர்தல் முடிந்த பிறகு குறிப்பிட்டக் கடைகளுக்குச் சென்று, அப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்; பல நேரங்களில் அவை போலி டோக்கன்களாக மாறி ஏமாந்த சம்பவங்களும் உண்டு. ஒரு கட்சி 1000 ரூபாய் என்றால், இன்னொரு கட்சி 500 ரூபாய் என்று அவரவருக்கு ஏற்றபடி பணம் பட்டுவாடா நடைபெறும். 1 மணி நேரம், 2 மணி நேரம், 4 மணி நேரம் என ஸ்லாட் எடுத்து, கட்சிக்கொடி பிடிக்க, கோஷம் போட, கூட்டம் கூட்ட ஆட்களை அழைத்துச் செல்வது என்பதெல்லாம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்துவரும் நடைமுறைகள்.
இதையெல்லாம் கண்டுகொள்வதற்குத் நேரமும் கிடையாது, தனது வேலையும் கிடையாது என்று தேர்தல் ஆணையமே தீர்மானித்துவிட்டது போல் தெரிகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்தி, யார் வெற்றி பெற்றார் என்பதை அறிவிப்பது மட்டுமே பிரதானப் பணியாக தேர்தல் ஆணையம் தன்னுடையப் பணியை சுருக்கிக் கொண்டது. 1991-ஆம் ஆண்டு ஷேசன் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலகட்டத்திற்குப் பிறகு நாம் ஜனநாயகப்பூர்வமான தேர்தல்களை சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதன் விளைவாக இப்பொழுது ஈரோட்டில் ஒரு புதிய பார்முலா கண்டுபிடிக்கப்பட்டு அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆளும் தரப்பு ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாகவே இத்தனைக் கூத்துகளும் அரங்கேறுகின்றன. இந்த பார்முலா வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை. ’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியாக ஆளையே கடிப்பது’ என்பதைப் போல ஈரோட்டில் தங்களுடைய ஆதரவு வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக ஆளுங்கட்சி ஜனநாயகத்தைக் கடித்துக் குதறுவதாகவே தெரிகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எதைத் தடுக்கவேண்டுமோ அதைத் தடுக்காமல் விட்டுவிட்டு, உப்புச்சப்பில்லாத ஒன்றுக்கும் உதவாத சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துவிட்டு, ஏதோ தேர்தல் அனைத்தும் ஜனநாயக ரீதியாக நடப்பதைப்போல காட்டிக்கொள்கிறார்கள்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு நாம் சென்றபோது, அரசல்புரசலாக நம்முடைய நிர்வாகிகள் கொடுத்த தகவல்கள் நூற்றுக்கு நூறு ஊர்ஜிதமாகி முழுக்கமுழுக்க ஈரோட்டில் ஜனநாயகப் படுகொலை தினம்தினம் நடைபெறுவதாகத் தெரிகிறது. தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதி வாக்காளப் பெருமக்கள் தங்கள் பகுதியிலிருந்து புறப்பட்டு, வேறு எந்தக் கட்சிக் கூட்டத்திற்கும் போக வேண்டாம்; வீட்டிலேயே இருந்தால் போதும்; வெளியே வேறொரு கட்சிக் கூட்டத்திற்கோ, அன்றாடப் பணிக்கோ சென்றால் என்ன சன்மானம் கிடைக்குமோ, அந்த சன்மானம் அவரவர் வீட்டிற்கே தினமும் காலையிலும் மாலையிலும் இரவிலும் வந்து சேரும்.
வாக்காளர்கள் எதிர்க்கட்சியினுடையக் கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டுவிடக் கூடாது; எதிர்க்கட்சிக்கு அதிகமான செல்வாக்கு இருக்கிறது என்ற எண்ணம் எவருக்கும் வந்துவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு, ஆடுமாடுகளைப் பட்டிகளில் அடைத்து வைப்பது போல, ஆளும் தரப்பினரின் முடக்கு முகாம்களில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையே, 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை அளிப்பதும், அந்த வாக்குரிமையை எவருடைய வெளித்தூண்டுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆசைவார்த்தைகளுக்கும் ஆட்படாமல், தங்களுக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மனசாட்சியோடு வாக்களிப்பது தான். அந்நிய தேசங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசம், 200 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு, சுதந்திரம் பெற்று, நமக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியதும், இது சுதந்திரமான ஜனநாயக நாடு என அறிவித்துக் கொண்டதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
எல்லோரும் இந்நாட்டு மன்னர், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை, நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத எவரும் தேர்தலில் போட்டியிட முடியும், அவர்கள் தங்கள் கொள்கை, கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியும். எனவே தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்திய அரசியல் சாசனத்திலேயே தன்னாட்சி அதிகாரமிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை சந்திப்பதற்கு முழு உரிமை உண்டு; அதற்கு எவரும் எந்தத் தடையும் செய்யக்கூடாது. வாக்காளர்களைக் கட்டாயப்படுத்தி வாக்களிக்கச் செய்வது அல்லது வாக்களிக்க விடாமல் தடுப்பது அல்லது வாக்காளர்களை அனைத்து வேட்பாளர்களும் சுதந்திரமாக சந்திக்கவிடாமல் தடுப்பது என அனைத்துமே தேர்தல் விதிமுறைகளின்படி கிரிமினல் குற்றங்கள் ஆகும்.
கடந்த 2 வாரங்களாக, பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்காளர்களை சுதந்திரமாக சந்திக்க விடாமல் தடுக்கக்கூடிய பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன; எதிர்க்கட்சித் தலைவர்களுடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாக்காளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியே வரவிடாமல் தடுக்கப்படக்கூடிய சூழல்கள் நிலவுகின்றன. 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முள்ளிவாய்க்காலில் 30,000 பேரை கொன்று குவித்தபிறகு, 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை அன்றைய இலங்கை அரசு முள்வேலி முகாம்களில் தான் அடைத்து வைத்தது. ஆனால், இன்று நாம் கேள்விப்படுன்ற வரையிலும், ஈரோட்டின் அனைத்து சந்துபொந்துகளிலும் கண்ணுக்குத் தென்படாத முள்வேலிகளைப் போன்று கருப்பு-சிவப்பு கரைவேட்டிக்காரர்களால் வாக்காளர்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திடீர் திடீரென்று சுற்றுலாப் பேருந்துகள் வருகின்றனவாம்; காலையில் கிளம்பி மாலை வரையிலும் தினசரி சுற்றுலா மற்றும் 4 அல்லது 5 நாட்கள் வரையிலும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகின்றனவாம்; வீடுதோறும் புலால்கள் கிலோ கணக்கில் வழங்கப்படுகின்றனவாம்; திருமண மண்டபங்கள், சிறுசிறு அரங்குகளில் புதுப்புதுத் திரைப்படங்கள் காட்டப்படுகின்றனவாம்; டீ, பிஸ்கட், முறுக்கு, ஸ்னாக்ஸ் என தாராளமாக வழங்கப்படுகின்றனவாம். இவையெல்லாம் பெரிய விருந்துக்கு முன்பாக சூப்பு சாப்பிடுவதற்கு ஒப்பானது. 27-ஆம் தேதிக்கு முன்பு பெரிய விருந்து இருப்பதாகவும், பட்டு வேட்டி, பட்டுப்புடவை சகிதங்கள், 5000 முதல் 10,000 ரூபாய் வரையிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்திட திட்டம் ஏற்கெனவே கைவசம் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இவைகளெல்லாம் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கலாம்.
ஆனால் கண்ணெதிரே ஒரு ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களையே ஆளுங்கட்சியினரைத் தவிர வேறு எவரும் சந்திக்க முடியாத ஓர் அவலநிலை உருவாகியுள்ளது. இதே போக்குகள் எதிர்காலத்திலும் தொடருமேயானால் தமிழகத்தின் நிலை என்னவாகும்? 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்தபோது வைத்த மை கூட பலருக்கும் இன்று அழிந்திருக்காது. கொடுத்த வாக்குறுதிகளில் இதை இதை செய்திருக்கிறோம் என்று சொல்லி வாக்குக் கேட்க ஆளுங்கட்சிக்கு வக்கில்லை. அதைவிடுத்து உச்சகட்ட முறைகேட்டில் ஈடுபட்டு, ஈரோட்டில் வெற்றிபெற நினைக்கிறார்கள். என்னதான் ஆசை வார்த்தைகளைப் பேசினாலும், பரிசுப் பொருட்களை அள்ளி வீசினாலும், அடக்கி வைத்தாலும், முடக்கிப் போட்டாலும், அனைத்தையும் மீறி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் மகத்தான வெற்றிபெறுவார் என்றுமே செய்திகள் வருகின்றன.
அதையும் மீறி ஆளுங்கட்சியே வெற்றி பெற்றாலும் அதை எவரும் பெருமையாகக் கருதமாட்டார்கள். எனினும் இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்று விரும்பக்கூடிய நம்மைப்போன்றவர்கள், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவை அனுமதிப்பதென்பது, ஜனநாயத்திற்கு இழைக்கப்படக்கூடிய மிகப்பெரிய அநீதியாகவும், ஜனநாயகப் படுகொலையாகவுமே கருதுவார்கள். இப்போது மட்டுமல்ல கடந்த காலங்களிலும் இடைத்தேர்தல்களிலும் பொதுத் தேர்தல்களிலும் அத்துமீறல்கள் நடைபெற்ற சமயத்தில், நாம் உரக்கக் குரல் எழுப்பியிருக்கிறோம். 2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் முறைகேடுகள் குறித்து கூட, தேர்தல் வாக்கு எண்ணிக்கையையே நிறுத்த வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்றோம். அரசியல் கட்சிகள் தவறு செய்யலாம்; அரசு நிர்வாகம் கூட தவறுகள் செய்யலாம்; ஆனால் நடுநாயகமாக விளங்கக்கூடிய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்திடல் ஆகாது.
இதுபோன்ற கர்ணக் கொடூரமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் வாக்காளர்களையே சந்திக்க விடாமல் அடைத்துப் போடும் செயலை அனுமதிக்குமேயானால், அது எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்தாக முடியும். 27-ஆம் தேதியைக் கடந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணாமல், களநிலவரத்தை ஆய்ந்தறிந்து, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, வாக்காளர்களை முடக்கு முகாம்களில் அடைத்துப் போடும் இதுபோன்ற புதுப்புது முறைகேடுகள் எதிர்காலத்தில் அரங்கேறா வண்ணமும், இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் எவரும் ஈடுபடாத வகையிலும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.