தமிழக அரசு தடம் மாறாமல் சென்று கொண்டிருந்தால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் துணிச்சலாக செயல்படுவேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், கட்சியில் இருந்த நீக்க முடியாது என்றும் நேற்று பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன், தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் ஆணைய உத்தரவை மீறி நேற்று தீர்மானம் வெளியிட்டுள்ளனர். துணை பொது செயலாளருக்கான பொறுப்புகள் நிறைவேற்றப்படும்.

கட்சிக்கு யார் தேவை, யார் தேவையில்லை என்பதை கட்சியின் பொது செயலாளர்தான் முடிவு செய்ய முடியும். தேவைப்பட்டால் அதிமுகவில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது. 

தமிழக அரசு தடம் மாறாமல் சென்று கொண்டிருந்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் துணிச்சலோடு செயல்படுவேன். தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.

5 ஆண்டுகள் ஆட்சி நிலைக்குமா என்பதை முதலமைச்சர், அமைச்சர்களிடம்தான் கேட்க வேண்டும். 2021 ஆம் ஆண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும என்பதே என் விருப்பம்.